Monday, September 19, 2011

எங்கேயும் எப்போதும் - விமர்சனம்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நல்ல படம் என்பதே இல்லாமல் போய்விட்டது. செம படம்,சூப்பர்,இப்படி ஒரு படம் பார்த்து எவ்ளோ நாளாச்சி என்று மக்கள் வாய் விட்டு,கண்ணீர் மல்க சொல்லி கேட்கவேயில்லை.இப்படி அனைத்து ஏக்கங்களையும்,குறைகளையும் ஒட்டுமொத்தமாக தீர்க்குமளவுக்கு ஒரு படம் வந்திருக்கிறதென்றால் அது எங்கேயும் எப்போதும் தான்.தமிழ் சினிமாவில் எப்போதாவது பூக்கும் குறிஞ்சி பூ இந்த எங்கேயும் எப்போதும்.

சமீபத்தில் வந்த நிறைய படங்களை பார்த்தேன்.படம் முடிந்து வெளியே வரும் போது என்னடா படம் இது என்று கோவம் தான் வந்தது.அந்த அளவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.மிகுந்த எதிர்பார்ப்போடு சென்று ஏமார்ந்து வந்தது தான் மிச்சம்.ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உள்ளே சென்று உட்கார்ந்து,வெளியில் வரும் போது கண்ணீர் மல்க என்ன படம் டா வாய்ப்பே இல்ல என்று சொல்லித்தான் வெளியே வந்தேன்.அழகான திரைக்கதை,பில்டப் இல்லாத அம்சமான நடிப்பு,ரம்மியமான இசை,கல்நெஞ்சையும் கரையவைக்கும் கிளைமாக்ஸ் இப்படி பல கலவைகள் ஒன்றாக கலந்து,கொடுத்த காசுக்கு திருப்தியை கொடுக்கும் அருமையான காவியம்.
கதை பெரிதாக ஒன்றும் இல்லை,இரண்டு வெவ்வேறு காதல் கதைகள் அழகாக பயணிக்கும் வாழ்க்கையில் விதி ஏற்படுத்தும் விளையாட்டு தான் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. ஆனால் இந்த கதையை இப்படி மிகமிக அழகாக திரைகதை பண்ண முடியுமா என்றால்,முடியும் என்று ஆச்சர்யபடுத்தி இருக்கிறார் இயக்குனர் சரவணன்.படத்தின் தொடக்க காட்சியிலேயே ஒரு பயங்கரமான விபத்தை காட்டிவிட்டு,4 மணிநேரத்திற்கு முன்பு என்று போட்டு விட்டு.பிறகு மீண்டும் திரைகதையில் சற்று வேகம் கூட்டி 6 மாதங்களுக்கு முன் என்று தொடங்கும் கதை வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிப்பையும்,அழகான காதலையும்,நல்ல நல்ல பாடல்களையும் அட போடவைக்கும் அற்புதமான
காட்சிகளையும் சுமந்துகொண்டு சூப்பராக செல்கிறது.

சென்னையில் இன்டர்வியுக்கு வரும் அனன்யா அவருடைய ஜோடியான சர்வாவுடன் இணைந்து வரும் காட்சிகளும்,அடிக்கும் லூட்டிகள் வயிறை வலிக்க வைக்கும் காமெடி ரகம்.அதுவும் அனன்யா வாய்ப்பே இல்ல அருமையான நடிப்பு.குழந்தை தனம் கலந்த இயல்பான இவரின் நடிப்பு நிச்சயம் சபாஷ் போடவைக்கும். இவருடைய நடிப்பும்,உடல் பாவனைகளும் லைலாவை நினைவுபடுத்துகிறது.ஊர்வசி,லைலா வரிசையில் நிச்சயம் அனன்யாவுக்கு இடம் உண்டு.சர்வா-அனன்யா இவர்களுக்குள் வரும் காதல் இயல்பாக,நம்பும் விதத்தில் அமைத்திருப்பது அருமை.அனன்யாவுக்கு நாடோடிக்கு பிறகு அமைந்த ஒரு நல்ல படம்.ஒரு நல்ல திருப்புமுனை என்று கூட சொல்லலாம்.சர்வாவும் கிடைத்த இடத்தில் எல்லாம் நல்லா ஸ்கோர் பண்ணி இருக்காரு.

ஜெய்-அஞ்சலி இன்னொரு காதல் ஜோடி,இருவருமே நன்கு நடிக்க தெரிந்தவர்கள் என்பதை நிரூபித்திருகிறார்கள்.குறிப்பாக அஞ்சலி அற்புதமான நடிப்பை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியிருக்கிறார்.அஞ்சலி தான் ஹீரோ,ஜெய் தான் ஹீரோயின்.அஞ்சலி மிகவும் தைரியமான ஒரு போலீஸ்காரரின் பெண்ணாக வாழ்ந்திருக்கிறார்.காதலிக்க துவங்கிய உடனே HIV டெஸ்ட் செய்வதும்,அதை தொடர்ந்து அவர் பேசும் வசனங்களும்,உடல் தானம் செய்யச் செய்வதும்,அதை தொடர்ந்து அவர் பேசும் வசனங்களும் தேட்டர் அதிர கைத்தட்டல்கள் வரும் காட்சிகள்.வரும் போது சம்பளக்கவரை எடுத்துவா என்று ஜெய்யிடம் சொல்லி அதை கண்ணா பின்னாவென செலவு செய்து ஜெய்யை அலற வைக்கும் காட்சி,நான் மட்டும் ஆம்பளையா இருந்திருந்தா உலகத்துல இருக்குற எல்லா சரக்கையும் அடிச்சி இருப்பேன் என்று ஜெய்யிடம் சொல்லும் காட்சி,நீ வேணா கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிக்கோ நா இப்பவே கட்டிகுறேன் என்று கட்டி பிடிக்கும் காட்சி.அவர் வேலை செய்யும் இடத்திற்கே வந்து ஜெய்யிடம் பேசும் காட்சி,ஐ லவ் யூ என்று சொல்லும் காட்சி இப்படி பல இடங்களில் அஞ்சலி அசத்தோ அசத்துன்னு அசத்தி அதகளபடுத்துகிறார்.இறுதிக்காட்சியில் அவருக்கே உண்டான தனி நடிப்பின் மூலம் அனைவரையும் அழவைக்கிறார்.நிறைய இடங்கள் சொல்லலாம் அஞ்சலியின் நடிப்பை பற்றி ஆனால் இந்த இடம் போதாது.அங்காடித்தெருவுக்கு பிறகு அஞ்சலிக்கு அமைந்த நல்ல படம் இது.இன்னும் ஒரு மையில் கல் என்று சொல்லலாம்.நன்றாக நடிக்க தெரிந்தவர் கதைகளை ஒழுங்காக தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் மிகப்பெரிய இடத்துக்கு வரலாம்.

ஜெய்-சுப்ரமணியபுரத்திற்கு பிறகு நடித்திருக்கிறார்.கிடைத்த இடத்திலெல்லாம் அஞ்சலியுடன் போட்டி போட்டு அசத்தியிருக்கிறார்.இயல்பான நடிப்பு அற்புதமாக வருகிறது ஜெயக்கு.வீட்டுக்கு அடங்குன புள்ள மாரி என்னமா நடிச்சி இருக்காரு.ஜெய்,அஞ்சலியின் அப்பாவை பார்த்துவிட்டு வந்த பிறகு அஞ்சலி அவர் யாருன்னு தெரியுமான்னு கேட்டவுடன் ஏட்டு என்று சொல்வதும்,எனக்கு யார்ன்னு கேட்டதும் உங்களுக்கு மட்டும் என்ன ஐ.ஜி யா உங்களுக்கும் ஏட்டு தானே என்று சொல்லு காட்சி.காபி ஷாப்பில் மசால் தோசை கேட்க்கும் காட்சி,அஞ்சலியை ஒரு தலையாக காதலிப்பவனிடம் போய் அடிவாங்கி வரும் காட்சி,அஞ்சலியின் அம்மாவுக்கு டாட்டா காட்டும் காட்சி,அஞ்சலியின் அப்பாவிடம் போய் பேசும் காட்சி,துணி கடையில் கிழிந்த ஜீன்ஸ் பேண்டை வாங்கும் காட்சி இன்னும் நிறைய இடங்களில் ஜெய் வயிறு வலிக்க சிரிக்கவும் வைக்கிறார்,அழகாக நடிக்கவும் செய்கிறார்.தொடர்ந்து தோல்வியே சந்தித்து வந்த ஜெய்க்கு இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனை என்று கூட சொல்லலாம்.தேவையான நேரத்தில் அருமையான படத்தில் நடித்து தன் நிலையை தமிழ் சினிமாவில் தக்க வைத்திருக்கிறார்.

இயக்குனர் சரவணன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மற்றுமொரு பொக்கிஷம்.தமிழ் சினிமாவில் பிழைத்துகொள்வார்.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்.அருமையான திரைகதை.இயல்பான வசனங்கள் என்று படத்தை அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைத்து 3 மணிநேரம் சீட்டை விட்டு எங்கும் நகர விடாமல் கட்டிப்போட்டு விடுகிறார்.தேவையான இடங்களில் பாடல்கள்.அதுவும் நல்ல பாடல்கள்.இப்படி ஒரு கதையை தயாரிப்பாளரிடம் எப்படி சொல்லி ஓகே பண்ணாருன்னே தெரியல.இதை எப்படி தயாரிப்பாளர் ஓகே செய்தார் என்பதும் மிகபெரிய ஆச்சர்யம்.படத்தை கமர்ஷியலாகவும் மட்டும் இல்லாமல் ஒரு நல்ல கருத்துடனும் கொடுத்திருக்கிறார்.இன்றைய சமுதாய விழிப்புணர்வுக்கு தேவைப்படும் அருமையான கருத்தை கொடுத்தது இன்னும் சிறப்பு.இன்றைய பல இயக்குனர்கள் சரவணனிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது.தேசிய விருதுக்கு நிச்சயம் இந்த படம் செல்லும்,விருதையும் வெல்லும்.சரவணன் சார் உங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது.வாழ்த்துக்கள்.

இசையமைப்பாளர் சத்யா நல்ல இசையமைப்பாளர் என்பதை அழகாக சொல்லி இருக்கிறார்.அருமையான பாடல்கள்.மனதை வருடவும் செய்கின்றன,தாளம் போடவும் செய்கின்றன.அனைத்து பாடல்களுமே அற்புதம்.பின்னனி இசையும் அருமையாக இருக்கிறது.இவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது.வாழ்த்துக்கள் சார்.

முருகதாஸ்.சொல்லப்பட வேண்டிய தயாரிப்பாளர்.வெற்றி தயாரிப்பாளர்.அருமையான படத்தை தயாரித்த பெருமை என்றுமே இருக்கும் இவருக்கு.இப்படி ஒரு கதையை ஓகே செய்ததர்க்கே இவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.படத்தில் வரும் அந்த விபத்து காட்சி நம்மை நிச்சயம் ஒரு நிமிடம் பயப்படவைக்கும்.அருமையான கேமரா.தொடக்க காட்சியும்,இண்ட்ரவல் காட்சியும் அற்புதம்.க்ளைமாக்சில் அந்த ஆம்புலன்சின் பின் புறம் எழுதி இருக்கும் வசனத்துடன் முடிப்பது நச்.


படத்தின் சிறு சிறு கதாபாத்திரங்களும் மனதை விட்டு பிரிய முடியாமல் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள்.குறிப்பாக தன் மனைவியை 8 மாத கர்ப்பிணியாக விட்டு விட்டு வேலை விஷயமாக துபாய் சென்று 5 வருடங்களுக்கு பிறகு நாடு திரும்பி வரும் அந்த கணவர் கண்களை குளமாக்கும் கதாபாத்திரம்.ஜெய்யின் அம்மா கதாப்பாத்திரமும் அவர் தாரை தப்பட்டையை குறிப்பிட்டு படத்தின் துவக்கத்தில் பேசும் வசனம் இறுதியில் சரியாக அந்த கொடுமையான விஷயத்திற்கு சரியாக பொருந்துவது கல் நெஞ்சையும் கரைக்கும்.மனைவியை விட்டு பிரிய மனமில்லாமல் ஊர் வரை கூடவே வந்து விட வரும் கணவர்,பார்த்த உடனே காதல் வலையில் விழும் காதலர்கள்,அம்மாவுடன் துடுக்குத்தனமாக பேசும் குழந்தை.அஞ்சலியின் அப்பா,அஞ்சலியை ஒரு தலையாக காதலிக்கும் அந்த நபர்.அனன்யாவின் அக்கா இன்னும் படத்தில் வரும் அனைத்து கதாபத்திரங்களும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருகின்றனர்.இந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்த இயக்குனர் சரவணனுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.
நிச்சயம் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத,தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு படம் இந்த எங்கேயும் எப்போதும்.இப்படி பட்ட படத்தை தந்த இயக்குனரையும்,தயாரிப்பாளரையும்,அந்த குழுவையும் வாய் வலிக்கும் வரை பாராட்டினாலும் தகும்.
மொத்ததில் இந்த எங்கேயும் எப்போதும் - என்றென்றும் எப்போதும் மக்கள் மனதிலும் தமிழ் சினிமா வரலாற்றிலும்...

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டு போட்டு விட்டு செல்லவும்.

Thursday, September 1, 2011

விநாயகரைப் கும்பிடும் போது குட்டு போட்டுகொள்வது ஏன்?

படித்ததில் பிடித்தது-Part-2.
நண்பர்களே நான் ஏற்கனவே சொன்னது போல,நான் படித்து,கேட்டு,பார்த்து பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டுவருகிறேன்.அந்த வகையில் இன்று நான் பார்த்து மிகவும் பிடித்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

நாம் விநாயகப்பெருமானை கும்பிடும் போது ஏன் தலையில் குட்டு போட்டுகொள்கிறேம் தெரியுமா?.

ஒருமுறை பொன்னி,பவானி,நர்மதை,தபதி,பென்னை ஆகிய 5 வற்றாத ஜீவ நதி சகோதரிகளும் சந்தோஷமாய் ஆடி,பாடி பொழுதை கழித்துக் கொண்டிருந்தனர்.அப்போது பொன்னி தன் சகோதரிகளிடம்,"நாமே இந்த உலகத்தில் சிறந்தவர்கள்.நம்மை மிஞ்ச யாருமில்லை.இந்த உலகத்தையே நாம் தான் செழிப்பாக வைத்திருக்கிறோம்.எம்பெருமான் சிவனின் தலையிலேயே நம்மை போன்ற ஒரு நதி தான் குடி கொண்டிருக்கிறது.ஆகவே நாம் தான் சிறந்தவர்.நம்மை மிஞ்ச யாரும் இல்லை என்ற ஆணவத்தோடு பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக அகத்திய மாமுனிவர் வந்துகொண்டிருந்தார்.அப்போது அவரை பார்த்த பொன்னி தன் சகோதரி பவானியிடம் யார் இந்த குள்ள முனிவர் என்று கிண்டலாக கேட்க்க,அவர் அகத்தியரை பற்றி சொல்லி விட்டு அவரிடம் இப்படி மரியதை இல்லாமல் பேசாதே அவர் ஈசனின் அருள் பெற்றவர் என்று கூறினார்.ஆனால் பொன்னியோ கேட்கவில்லை,மாறாக இந்த முனிவர்களே ஆண்டவனை தினமும் காலையிலும்,மாலையிலும் பூஜிக்க நம்மையே நாடி,தேடி வந்துதானே குளிக்கின்றனர் என்று திமிராக பேசிவிட்டு,அங்கு வந்த அகத்தியரை அவருடய உயரத்தையும்,உருவத்தையும் வைத்து கிண்டல் செய்ய தொடங்கினார்.

பொன்னியின் இந்த செயலை கண்ட அகத்தியர் மிகுந்த கோபமுற்று பொன்னியை எச்சரித்தார்.ஆனால் பொன்னி இன்னும் அதிகமாய் அவரை ஏளனம் செய்ய,கோபத்தின் உச்சத்திற்கே சென்றார் அகதியர்.அதன் விளைவாக தன் கமண்டலத்தில் அவ்வளவு பெரிய பொன்னி நதியை அடக்கி வைத்துவிட்டர்.பொன்னியால் அங்கும்,இங்கும் ஓடித்திரிய முடியாமல் அகத்தியமாமுனிவரின் கமண்டலத்தில் ஒடுங்கி,அடங்கி போனாள்.இதை கண்ட மற்ற சகோதரிகள் நால்வரும் என்ன செய்வது என்று அரியாமல் நாரதரிடம் போய் முறையிட்டனர்.அவர் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார்.அவர் இந்த விஷயத்தை விநாயகப்பெருமானிடம் கொண்டு சென்று,காப்பாற்ற வழி செய்யுமாறு கேட்டார்.பெண்மைக்கு ஆணவம் கூடாது.அகத்தியரிடம் அவள் பேசியது தவறு,அதற்கேற்ற தண்டனையை தான் அவள் பெற்றிருக்கிறாள் என்று கைவிரித்துவிட.நாரதர் இது ஜீவ நதியாயிற்றே,இது பரந்து,விரிந்து ஓடினால் தானே நன்மைதரும்.அது படைக்க பட்ட நேக்கமும் அதுதானே என்று விநாயகரிடம் இன்னும் அதிகமாய் கெஞ்சினார்.சரி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று விநாயகர் அவரை அனுப்பிவைத்தார்.

பின்பு விநாயகர் நேராக அகத்தியர் இருக்கும் இடத்திற்க்கு போய்,என்ன செய்து பொன்னியை காப்பாற்றலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தார்.அப்போது விநாயகப்பெருமான் காக்கை போல் மாறி அகத்தியரின் கமண்டலத்தை கீழே தள்ளிவிட,பொன்னி மீண்டும் ஆறாக பெறுக்கெடுத்து ஓட ஆறம்பித்தாள்.இதை கண்ட அகத்தியர் மிகுந்த கோபத்துடனும்,ஆச்சர்யத்துடனும் ஆற்றைப் பார்த்துகொண்டிருந்தார்.விநாயகப்பெருமான் உடனே காக்கை வடிவில் இருந்து ஒரு சிறுவனாக மாறி அங்கிருந்து ஓட ஆரம்பித்தார்.இதை கண்ட அகத்தியர் அந்த சிறுவனை பிடித்து ஏன் இப்படி செய்தாய் என்று கோபத்துடன் கேட்டார்.இதற்க்கு அந்த சிறுவன் நீர் எதற்காக இந்த ஆற்றை உங்கள் கமண்டலத்தில் அடைத்து வைத்தீர்கள் என்று எதிர் கேள்வி கேட்டார்.அதற்க்கு அகத்தியர் அது என் சொந்த பிரச்சனை என்று சொன்னார்.அதற்க்கு அந்த சிறுவன் ஆற்றை விடுவித்தது பொது பிரச்சனை என்று பதில் சொன்னார்.மிகுந்த கோபமுற்ற அகத்தியர் அந்த சிறுவனை குட்ட முயன்றார்,உடனே விநாயகர் தன் சொந்த உருவத்திற்க்கு மாறினார்.உடனே அகத்தியர் மிகுந்த கலக்கமுற்று "ஐயனே என்ன விளையாட்டு இது"என்று கேட்க,விநாயகர் ஏன் குட்டவில்லை என்று கேட்டார்.


அதற்க்கு அகத்தியர் தன் தலையில் குட்டிக்கொண்டு மன்னிக்க வேண்டினார்.அது மட்டும் இல்லாமல் தவறு செய்யும் அனைவரும் இனி உம்மிடம் வந்து மனமுவந்து வேண்டி குட்டு போட்டுகொண்டால் அவர்கள் பாவமும் மன்னிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.விநாயகரும் அப்படியே அருள் புரிந்தார்.

நாரதர் அங்கு வந்து பொன்னி தன் தவறை உணர்ந்துவிட்டாள்,இன்று முதல் அவள் வேறு பெயர் பெற்று அழைக்க பட வேண்டும் என்று கூறி அகத்தியரை வேறு பெயர் வைக்குமாறு கேட்டுகொண்டார்.உடனே அகத்தியர்,விநாயகர் காக்கை வடிவில் வந்து கமண்டலத்தை தட்டி விட்டு பொன்னியை விரிந்தோடச்செய்த்ததால் இன்று முதல் பொன்னி காவிரி என்று அழைக்கப்படுவாள் என்று அருள் புரிந்தார்.பொன்னியும் அகத்தியரிடம் மன்னிப்பு கேட்டு,என்னை பற்றி ஒரு பாடல் பாடுங்கள் சாமி என்று தாழ்மையுடன் கேட்க,அகத்தியர் அழகாக காவிரியை பாடி அங்கிருந்து சென்றார்...

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டு போட்டு விட்டு செல்லுங்கள்.

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...