Friday, April 2, 2010

அங்காடித் தெரு


Cast :Magesh, Anjali
Direction :Vasantha Balan
Production :K.Karuna moorthi,C.Arun Pandiyan
Music :GV Prakash Kumar, Vijay Antony.


தாங்க முடியாத வலிகளை தன் குடும்பமுன்னேற்றத்திற்காக வசந்தங்களாக ஏற்றுகொண்டு இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்,நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சில மனிதர்களின் இயல்பானவாழ்க்கையை சிறிதும் பிழை இல்லாமல்அப்படியே சொல்லியிருக்கும் அற்புதமானபடம்.இல்லை இல்லை வரலாறு.
நெடுநாள் கழித்து தமிழ் சினிமாவில்வெளிவந்துள்ள மிக சிறந்த அற்புதமான காதல்கவிதை.தமிழ் சினிமா அவ்வப்போது உயிர்பெறுகிறதென்றால் அது இப்படிப்பட்ட படங்கள்மூலம் தான் என்று சொன்னால் மிகைஆகாது.

பள்ளியிலேயே முதல் மாணவனாக வரும் லிங்கு ( மகேஷ்) தன் தந்தையின் அகால மரணத்தின் மூலம் மேற்கொண்டு படிக்க முடியாமல் குடும்ப பாரத்தை தோள் மேல் சுமந்து கொண்டு சென்னை தீ.நகரில் உள்ள மிக பிரபலமான ஒரு ரெடிமேட் ஷோரூமிற்கு வேலைக்கு வருகிறான்.ஏற்கனவே அங்கு வேலைபார்க்கும்
கனியுடன் (அஞ்சலி) அடிக்கடி சின்ன சின்ன சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான்.இந்த சண்டை நாளடைவில் காதலாக மலர்கிறது.இந்த காதலை வேரோடு அறுக்க சில கருங்காலிகள் கையில் ஆயுதங்களுடன் அலைகிறார்கள்.இவர்கள் எண்ணம் நிறைவேறியத காதலர்கள் இணைந்தார்களா,பிரிந்தார்கள என்பதை அழுத்தமாகவும்,ஆணித்தனமாகவும்,அற்புதமாகவும்,அழகாகவும் பதிவுசெய்திருக்கிறார் வசந்தபாலன்.
படம் பார்க்காதவர்கள் தேட்டர் சென்று பாருங்கள்.பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் சென்றுபாருங்கள்.


குடும்ப வறுமையினாலும்,சூழ்நிலையாலும் கிராமத்திலிருந்து ரெடிமேட் ஷோரூமுக்கு வேலைக்கு வரும் இளைஞர்களும்.இளம் பெண்களும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த வேலை செய்கிறார்கள்.இந்த வேலைக்காக எதையெல்லாம் தாங்கிக்கொள்கிறார்கள் என்பதை யாருக்கும் பயப்படாமல் ஆணியடித்து சொல்லியிருக்கிறார் இயக்குனர். படம் துவக்க காட்சியில் வரும் விடுதியும்,சாப்பிடும் இடமும்,அவர்கள் குளிக்கும் இடத்தையும் பார்க்கும் போது நமக்கே ஒரு அருவருப்பபையும்,கண்களில் கண்ணீரையும் வரவழைத்து விடுகிறது.இது எல்லாம் உண்மைதானா என்று நாமே நம்மை கேட்டுகொள்ளாவும் செய்கிறது.என்னடா இது ஒரு அழுகாச்சி நிறைந்த ஒரு சோகமான படமோ என்று நினைக்க தோன்றிய சில நிமிடங்களிலேயே,இவை எல்லாவற்றையும் மீறி இறுதியாக நம்மை அந்த (டை)தைக்குள் பின்னிபினைய வைத்திருப்பது திரைக்கதையின் பலம்.

சரி நான் படத்தை பற்றியும் அதற்க்கு உயிர் தந்தவர்களை பற்றியும் கொஞ்சம் சொல்ல ஆசை படுகிறேன்.முதலில் இந்த வரலாற்றை உருவாக்கிய காவியத் தலைவன் பற்றி.

வசந்தபாலன்:

இந்தியாவின் மிக சிறந்த 10 இயக்குனர்களில் இவரும் ஒருவர் என்று சொன்னால் அது மிகையாகாது.படம் துவங்கிய 20 நிமிடங்களுக்குள்ளாகவே அனைவரையும் சீட்டின் நுனிக்கு கொண்டுவரும் இடம் துவங்கி படத்தின் இறுதி காட்சியில் கனி ''என்னங்க வீட்டுக்குக்கு பணம் அனுப்பனும்னு சொன்னிங்களே அனுப்பியாச்சா''என்று கேட்க்கும் காட்சி வரை அனைத்து இடங்களிலும் கைதட்டல் பெறுகிறார் வசந்தபாலன்.குறிப்பாக ரங்கநாதன் தெரு அதை சுற்றி நடக்கும் கதையை அற்புதமாக இயக்கி இருக்கிறார்.படத்தின் உண்மையான கதாநாயகன் ரங்கநாதன் தெரு தான்.இப்படி ஒரு கதை களத்தை கையில் எடுப்பதற்கு கொஞ்சம் தைரியம் வேண்டும் தான்.ஒரே இடத்தை காண்பிக்கிறார்களே படம் போர் அடிக்குமோ என்று நான் கூட நினைதேன்.ஆனால் என் கணிப்பு மிகவும் தவறாகிப்போனது படம் மெல்ல மெல்ல நகர தொடங்கிய பிறகு.படத்தின் முதல் காட்சியில் கனியும்,லிங்குவும் கால்களை மிதித்து விளையாடும் விளையாட்டு ஏன் என்றும்,தேவையில்லாதது என்று நினைக்க தோன்றினாலும் இறுதியில் அந்த காட்சி வைக்கபட்ட காரணம் புரிந்தவுடன் நம்மால் பேச முடியவில்லை நம் கண்ணீர்தான் பேசுகிறது.எல்லாவற்றிற்கும் மேல் நடப்பவைகளை யாருக்கும் பயப்படாமல் அப்படியே ஆணியடித்து காண்பித்து கண்கலங்க வைத்து கைதட்டல் பெறுகிறார் வசந்தபாலன்.இது போல் பல காட்சிகளில் தன் தனி முத்திரையை பதித்து நான் மிகச்சிறந்த 10 இயக்குனர்களில் ஒருவன் என்று மீண்டும் நிரூபித்துள்ளார்.படத்தில் வரும் அனைவரையும் சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் பச்சைமரத்தில் ஆணியடித்தது போல மனதில் பதியவைத்து இருப்பது வசந்தபாலனின் தனிச்சிறப்பு.பெயரில் வசந்தத்தை வைத்திருந்தாலும் இவர் வசந்தத்தை விரைவில் பெறவில்லை என்பதே உண்மை.இவரின் ஆல்பம் சரியாக போகாத காரணத்தினால் கிட்டத்தட்ட 1.5 வருடம் தன் ரூமை விட்டு வெளியே வராத அளவுக்கு கூனி குறுகிப் போயிருந்தாராம்.பிறகு வெயில் தந்த வெற்றியில் சற்று இளைபாறிவிட்டு மீண்டும் இதோ ஒரு படத்தின் (அங்காடித்தெரு) கொடுத்து அனைவரையும் பேசமுடியாமல் செய்து விட்டார்.வசந்தபாலன் சார்,உங்களுக்கு நிச்சயம் தேசியவிருது உண்டு,ஆனால் எத்தனை என்று தெரியவில்லை.என்னால் உங்களை பாராட்ட முடியுமே தவிர வேறு ஒன்றும் பெரிதாக செய்துவிட முடியாது.என்னிடம் பேசுபவர்கள்,தெரிந்தவர்கள்,தெரியாதவர்கள் யாராக இருந்தாலும் அங்காடிதெருவை பார்க்கசொல்லி வற்புறுத்துகிறேன்.நான் குறைந்தபட்சம் 50 முறையாவது பார்பேன் திரைஅரங்கில் மட்டுமே.நீங்கள் என் எதிரில் வந்தால் என் தோள் மீது வைத்து கொண்டாடுவேன் உங்கள் எடையை பற்றி கவலைபடாமல். இப்படி ஒரு படத்திற்காக 4 வருடம் என்ன 40 வருடங்களும் காத்து இருக்கலாம் தவறில்லை.ஆனால் என்னை போன்ற உங்களுடைய தீவிர ரசிகர்களுக்காக கொஞ்சம் முடிந்தவரை சீக்கிரமாக எடுங்கள். இவரைப்போல் ஒரு இயக்குனர் நம் மத்தியில் இருப்பதை நினைத்து பெருமைபடவேண்டும்.

தயாரிப்பாளர்கள் :

திரு.அருண்பாண்டியன்,திரு.கருணாமூர்த்தி இவர்களை பற்றி சொல்லியே ஆகவேண்டும்.கருணாமூர்த்தி அவர்களின் போட்டோ கிடைக்கவில்லை மன்னிக்கவும்.
இவர்கள் இல்லையென்றால் இப்படி ஒரு படம் நிச்சயம் வந்திருக்காது.உங்கள்ளுக்கு மிக்க மிக்க என் சிரம் தாழ்ந்த நன்றிகளும்,வாழ்த்துக்களும்.அருண் பாண்டியன் சார்,கருணாமூர்த்தி சார்,எங்கள் நண்பன் ஒருவன் இருக்கிறான்.அங்காடித் தெரு போன்ற அற்புதமான கதைகளை வைத்திருக்கிறான்.நீங்கள் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் நிச்சயம் சாதிப்பான்.அவனுக்கு ஒரு வெளிச்சம் காட்டுங்கள்,அவன் பல புதிய பாதைகளை காட்டுவான்.

அஞ்சலி :

படத்தின் முக்கிய கதாபாத்திரம்.அஞ்சலி இந்த படத்திற்கு மிக நல்ல தேர்வு.கனியாகவே வாழ்ந்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.அவரை தவிர இந்த கதாபாத்திரத்தை வேறு எவராலும் இந்தளவுக்கு முழுமையாக செய்திருக்க முடியாது.இவ்வளவு நாள் இந்த நடிப்பை எங்கு தான் ஒளித்து வைத்திருந்தாரோ தெரியவில்லை.இந்த படத்தில் அஞ்சலியை இவ்வளவு அழகாக காண்பித்திருக்கிறார் இயக்குனர்.இந்த படத்தில் காட்டியதைப்போல் வேறு எந்த படத்திலும் காட்டவில்லை என்பதே உண்மை Simply Superb.அவருடைய நடிப்பைபற்றி குறிப்பாக ஒரு சில காட்சிகளைசொல்லியே ஆக வேண்டும்.லிங்கு,கருங்காலி கிட்ட கனியை போட்டு கொடுக்கும் காட்சிக்கு பிறகு வரும் வசனங்களில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.இறுதி காட்சியில் தன் கால்கள் இல்லையே என்று கதறும் காட்சி.இனி நாம் யாருக்கும் பாரமாக இருக்க கூடாது என்று நினைத்து பார்க்கும் காட்சி.பாடல் காட்சிகளில் முக பாவனைகளை மாறி மாறி காட்டி அசத்தி இருக்கிறார்.இன்னும் எத்தனையோ காட்சிகளை சொல்லலாம் இந்த இடம் பத்தாது.சோகம், காதல் ஏக்கம், அழுகை, இயலமை. அவமானம், என அனைத்து பரிணாமங்களையும் கொட்டி நடித்திருக்கிறார்.கனி நிச்சயம் உங்களுக்கு ஒரு தேசிய விருது உண்டு.அதுவும் அந்த திருநெல்வேலி பாஷை பேசி நடித்திருப்பது மிகவும் பிரமாதம்.அஞ்சலி நான் உங்களின் தீவிர ரசிகனாகிவிட்டேன்.So இனி வரும் படங்களில் எங்களை ஏமாற்றாதீர்கள் நன்றாக தேர்வுசெயுங்கள்.தமிழ் சினிமா தவரவிடவிருந்த விலை மதிக்கமுடியாத முத்து நீங்கள்.நல்ல வேலை வசந்தபாலன் காப்பாற்றிவிட்டார்.மிக்க நன்றிசார்.

மகேஷ்:

மகேஷ் அருமையான அறிமுகம்.கதாநாயகன் தேடலை நான் விஜய் டிவியில் பார்த்தேன் ஆச்சர்யமாகவும் அதே நேரத்தில் கொஞ்சம் சிரிப்பாகவும் இருந்தது.லிங்குவாக வாழ்ந்துகாட்டியிருக்கிறார்.கதாநாயகனை தேட 6 மாதங்கள் காத்திருந்ததாக இயக்குனர் சொன்னார் ஒரு பேட்டியில்.இவருக்காக 1 வருடம் காத்திருந்தாலும் தவறில்லை.மிகவும் அழகான அற்புதமான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை அள்ளி கொடுத்திருக்கிறார் லிங்கு.குறிப்பாக சில காட்சிகள்.அந்த குளியலறையின் பக்கத்தில் நின்று கனியிடம் பேசும் காட்சி.கருங்காளியிடம் அடிவாங்கிய பிறகு வரும் காட்சி.இறுதிக் காட்சியில் ''நல்ல யோசிச்சிட்டேன் கனி,வா இப்பவே போய் கல்யாணம் பண்ணிக்கலாம்''என்று சொல்லும் காட்சிகளில் கைதட்டல் பெற்று கண்களையும் கலங்க வைக்கிறார்.இப்படியும் ஒரு காதலன் இருக்கிறானே என்று ஆண் வர்கத்தையே பெருமைப்பட வைத்துவிடுகிறார்.உண்மையாகவே சொல்கிறேன் உங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது.

விஜய் அந்தோனி & G.V.பிரகாஷ்:

இவர்கள் இருவரை பற்றி நிச்சயம் சொல்லியே ஆக வேண்டும்.படத்திற்கு கதாபாத்திரங்கள் எப்படி உயிர் கொடுத்திருக்கிறார்களோ அதே போல தன் இனிமையான இசையால் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.பின்னணி இசை ஆஹா,ஓஹோ என சொல்லும் அளவுக்கு அற்புதமாக இருக்கிறது.அதிலும் ''அவள் அப்படி ஒன்றும் அழகில்லை'' பாடலும் ''உன் பேரை சொல்லும்போதே'' பாடலும் அற்புதம்.வார்த்தைகள் இல்லை வர்ணிக்க.இந்த பாடல்கள் இனி அனைத்து மொபைல்களிலும் ரிங்டோனாகவும்,டயலர் டோனாகவும் வலம் வருவதை அனைவரும் காணத்தான் போகிறோம்.குறிப்பாக ''உன் பேரை சொல்லும்போதே'' பாடல் எல்லா வலிகளிலிருந்தும் அடைகாக்கும் காதலின் உள்ளங்கை வெப்பத்திற்கு சமம்.எங்கே போவேனோ பாடல் காதலின் வலியை நமக்கும் உணர்த்துகிறது.அனைத்து பாடல்களுமே அற்புதமாய் இருக்கிறது.இவர்களின் இசை படத்திற்கு இன்னுமொரு பெரியபலம்.

ரிச்சர்ட்:
இவரின் போட்டோ கிடைக்கவில்லை மன்னிக்கவும்.ரங்கநாதன் தெருவில் நடப்பதே மிகவும் கடினம்.இதில் கேமராவை வைத்து விளையாடி இருக்கிறார் ரிச்சர்ட்.வாழ்த்துக்கள் சார்.உங்களுக்கும் பல விருதுகள் காத்திருக்கிறது.ரங்கநாதன் தெருவை இவ்வளவு அழகாக காண்பித்து ஆச்சர்ய படவைகுறீர்கள்.அங்காடித்தெரு உங்களால் தான் இவளவு அழகாக இருக்கிறது.ஆனால் இதை தர நீங்கள் என்ன கஷ்ட்ட பட்டிருப்பீர்கள் என்று நன்றாகவே தெரிகிறது.


முத்துக்குமார் & ஜெயமோகன்:

இவர்கள் இருவரை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.முத்துக்குமாரின் பாடல் வரிகள் அற்புதமாய் ஆழமாய் இருகின்றன.பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் அழுத்தமான வார்த்தைகள் இருப்பது அந்த பாடல்களுக்கே உள்ள அழகு.மீண்டும் நிரூபித்திருக்கிறார் முத்துக்குமார்.வாழ்த்துக்கள் சார்.ஜெயமோகன் சமீபகாலமாக அழுத்தமாகவும் ஆழமாகவும் அழகாகவும் வசனங்கள் எழுதி வலம் வருகிறார்.அனைத்து வசனங்களும் ஆணிதனமானவை.குறிப்பாக குளியலறையின் அருகில் கனியிடம் லிங்கு பேசும் வசனம்.கனி சோபியிடம் ''இவன் ஒருவநிடமாவது மான,ரோஷத்துடன் இருக்கிறேனே என்று சொல்லும் வசனம்.குள்ள மனிதரின் மனைவி குழந்தை பெற்று வரும் போது பேசும் வசனம்.விக்குறவன் தான் இங்க ஜெயிப்பான் இப்படி பல வசனங்கள் திரையரங்கை கைதட்டல்களால் அதிரவைக்கும் வசனங்கள்.உங்களுக்கும் பல விருதுகள் காத்திருக்கிறது வாழ்த்துக்கள்சார்.

A. வெங்கடேஷ் :
இப்படி ஒரு வில்லனை தமிழ் சினிமா இவ்வளவு நாள் எப்படி விட்டு வைத்தது என்று தெரியவில்லை.கண்களாலேயே மிரட்டுகிறார்.அவர்கள் மிரல்கிறார்களோ இல்லையோ நாம் நன்றாகவே மிரல்கிறோம்.சார் இந்த வருடத்தின் சிறந்த வில்லன் நீங்கள் தான்.திரையரங்குகளில் உங்களை மிகவும் கேவலமாக திட்டுகிறார்கள்.அது தான் உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.வாழ்த்துக்கள்சார்.

பாண்டி:
இவரை வசந்தபாலன் தான் முழுமையாக உபயோகப்படுத்தியிருக்கிறார்.நல்ல நகைசுவையாளர்.நல்ல குணசித்திர நடிகர்.படம் இன்னும் அழகாக செல்ல இவருடைய பங்களிப்பும் மிகவும் முக்கியமான ஒன்று.உங்களுக்கும் மிகப்பெரிய எதிர்காலம் நிச்சயமாய் உண்டு சார்.வாழ்த்துக்கள்.இவருக்கு ஜோடியாக வரும் சோபியும் நன்றாக நடித்திருக்கிறார்.இவர் இந்த படத்திற்காக தன் இடுப்பு வரை இருந்த அழகான கூதலையே வெட்டி இருக்கிறார் என்றால் பாருங்களேன்.லிங்குவின் தங்கையாக வரும் குட்டி அந்த பையை வாங்கும் காட்சியில் அதகளபடுதியிருக்கிறார்.கனியின் தங்கையாக வரும் நாகுவின் நடிப்பும்யதார்த்தம்.

இவர்கள் மட்டுமல்ல செல்லவராணி,சௌந்தரபாண்டி,பழகருப்பையா,குள்ள மனிதர்,அவரின் மனைவி,கண் தெரியாத முதியவர்,குப்பை பொறுக்கும் முதியவர்,பிச்சையெடுக்காமல், கழிப்பறையை சுத்தம் செய்து உழைத்து நல்லநிலமைக்கு வரும் மனிதர் இப்படி இன்னும் பலர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகவும்,அழகாகவும்,அற்புதமாகவும்,பயன்படுத்தி நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார்கள்.

என்னை பொறுத்தவரையில் ஒரு நல்ல ரசிகனாக இந்த படத்தில் ஒரு சிறுய குறையும் இல்லை என்று நான் சொல்வேன்.
கடந்த 5 வருடங்களில் இது போன்ற படம் வந்ததில்லை
கடந்த 10 வருடங்களில் மிகச்சிறந்த கிளைமாக்ஸ் இதுதான்.இந்த படம் இந்த வருடத்தின் சிறந்த படம்,சிறந்த இயக்குனர்,சிறந்த கதாநாயகி,கதாநாயகன்,வசனகர்த்தா,பாடலாசிரியர்,இசையமைப்பாளர்,கேமராமேன்,நகைச்சுவையாளர்,சிறந்த கதை என அனைத்து பிரிவுகளிலும் விருது வாங்குவதுநிச்சயம்.
நான் படத்தை முதலில் பாரத் என்ற திரை அரங்கில் தான் பார்த்தேன்.கிளைமாக்ஸ் காட்சியில் ஒட்டுமொத்த திரை அரங்கும் எழுந்து நின்று கைதட்டியது.இதுவரை நான் இப்படி மக்கள் செய்துபார்க்கவில்லை.
ஒரு முக்கியமான சம்பவத்தை சொல்ல மறந்து விட்டேன்.படம் வெளியான போது சென்னையில் பல திரை அரங்குகளில் படத்தை வாங்கவில்லை.படம் வெளிவந்து 2 நாட்களுக்கு பிறகே அனைத்து திரையரங்குகளும் போட்டி போட்டுக்கொண்டு வாங்க தொடங்கினர்.அது மட்டுமில்லை நான் சாந்தி தேட்டர் அருகில் தான் வேலை செய்கிறேன் அங்கு அங்காடித் தெருவுக்கு மிகச்சிறிய அளவே பேனர் வைத்திருந்தார்கள்,அது கூட தலைமைச்யலகத்தை பார்த்த மாதிரி.அங்கு அசல் படத்திற்கு மிகப்பெரிய
பேனர்கள் வைத்திருந்தார்கள்.எனக்கு கோவம் தான் வந்தது.ஆனால் சரியாக 2 நாட்கள் கழித்து அசல் பேனரை எடுத்து விட்டு அதே இடத்தில மிகப்பெரிய பேனர் வைத்தார்கள்.மிகவும் சந்தோஷப்பட்டேன்.படம் பேசபடதொடங்கிவிட்டது என்று.இப்போது படம் சாதாரண நாட்களிலேயே House புல் காட்சிகளாக போய்கொண்டிருக்கிறது.மிகவும் மகிழ்சியாயிருக்கிரேன். நம் தமிழ் மக்கள் எப்பொழுதும் நல்ல படங்களை கைவிடுவதில்லை.தலை மீது வைத்து கொண்டாடுவார்கள்.

மொத்தத்தில் இந்த அங்காடித் தெரு அழகான,அற்புதமான,ஆர்ப்பாட்டமில்லாத பல உண்மையான சம்பவங்களையும்,திருப்பங்களையும் கொண்ட திறமையான ஒரு படைப்பாளியால் கண்டெடுக்கப்பட்ட வரலாற்று தெரு.

அங்காடித் தெரு அற்புதமான படைப்பு.


10 comments:

ஆர்வா said...

ஹாய் மச்சி... இந்தப்படம் உன்னை ரொம்ப பாதிச்சிருக்கு போல. எனக்கும் இந்தப்படம் ரொம்ப
ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப நாளைக்கப்புறம் மனசை பாதிச்ச படம். இந்தப்படத்தைப்பத்தி நான் எழுதணும்'ன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். ஆனா டைம் கிடைக்கலை. நான் என்னென்ன எழுதணும்'ன்னு நினைச்சேன்னோ
அதையெல்லாம் நீ எழுதி இருக்கே. அதனால நான் எழுதணும்'ங்கிற தேவையே இல்லாம போச்சு.
உன்னோட எழுத்துக்கள்'ல இருந்து நீ எந்த அளவுக்கு இந்தப்படத்தை லவ் பண்ணி இருக்கேன்னு தெரிஞ்சுக்க முடியுது.

பார்த்தோம், ரசிச்சோம், போனோம்'ன்ன்னு இல்லாம இவ்ளோ ஈடுபாட்டோட எழுதி இருக்கும் போது
இந்த படம் உனக்குள்ள எவ்ளோ பாதிப்பை ஏற்படுத்தி இருக்குன்னு புரிஞ்சுக்க முடியுது. வாழ்த்துக்கள். தொடர்ந்து இதுபோல் எழுது.
காத்துக்கிட்டு இருக்கோம்.
உனக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்டா
(அது எதுக்குன்னு உனக்கு மட்டும்தான் புரியும்)

ஸ்வீட் ராஸ்கல் said...

முதல் கமெண்ட் நீ போட்டது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு மச்சி.நான் பெரிதாக ஒன்றும் எழுதிவிடவில்லை.அவர் காண்பித்ததில் 10% மட்டுமே சொல்லியிருக்கிறேன்.படத்தை பார்க்காதவர்கள் சீக்கிரமாய் சென்று பாருங்கள்.மச்சி எதுக்கு டா தேங்க்ஸ் .நா உண்மைதானே சொன்னேன்.இது என் கடமையும் கூட.சீக்கிரம் அந்த நாள் வரும்.காத்துகிட்டு இருக்கேன் நான் மட்டுமல்ல நம் அனைத்து நண்பர்களும் கூட.

Unknown said...

ரொம்ப நாளைக்கப்புறம் எழுதி இருக்கீங்க போல. என்னையும் இந்தப்படம் ரொம்ப பாதிச்சு இருக்கு. தமிழ்'ல ஒரு புது முயற்சி. தலையில தூக்கி வெச்சி கொண்டாடுற மாதிரி ஒரு படைப்பை கொடுத்து நம்மை எல்லாம் கர்வப்பட
வெச்சி இருக்காரு இயக்குனர் வசந்தபாலன். பொதுவா பசங்களுக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்'ன்னு
இருக்கிற படங்கள்தான் பிடிக்கும். ஆனா இந்த மாதிரி ரசனையான படங்களையும் ரசிக்கிறாங்கன்னு கேட்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு. அஞ்சலி, மகேஷ் எல்லாருமே பிரமிப்பை
ஏற்படுத்துறாங்க.

இந்தப்படத்தோட உண்மையான ஹீரோ ஜெயமோகன்தான். டைம் கிடைச்சா அவருடைய புத்தகங்கள் படிச்சு பாருங்க. (விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், ரப்பர், காடு, ஏழாம் உலகம் ) இந்த எல்லா புத்தகமுமே ரொம்ப பிரமிப்பா இருக்கும். அவருடைய
பிறந்த நாள் இந்த மாதம் 22ந் தேதி. முடிஞ்சா அவருக்கு ஒரு வாழ்த்து அனுப்புங்க.

உங்க பாதிவுகள்'ல Alignment மட்டும் கொஞ்சம் சரியா பார்த்துக்குங்க. Keep it up.

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi நதியா,
எப்படி இருக்கீங்க? நீங்க கமெண்ட் போட்டது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.மிக்க நன்றி.உண்மைதான் நதியா நீங்க சொல்றது.நான் இன்று தான் பெங்களூரில் இருந்து சென்னைவந்தேன்,அங்கு ஒரு 4 திரையரங்குகளில் அங்காடித்தெரு வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது.நான் அங்கு PVR திரையரங்கில் அங்காடித்தெரு படம் பார்த்தேன்.படம் அங்கும் House full காட்சிகளாகத்தான் போய்கொண்டிருக்கிறது.நான் படத்தை 6வது முறையாக பார்த்தேன்.அங்கு இருக்கும் கன்னட நண்பர்களும்,கன்னட மக்களும் படத்தை வாய்விட்டு பாராட்டுகின்றனர்.இப்படி ஒரு படம் தமிழ் சினிமாவில் வரவில்லை இனியும் வரப்போவதில்லை என்று பலர் கூறுவதை கேட்டேன்.கண்கலங்கியவாரே பலர் தேட்டரை விட்டு வெளியே வருவதை பார்த்து மிகவும் பெருமையும்,சந்தோஷமும் பட்டேன்,ஏன் கொஞ்சம் கர்வப்பட்டேன் என்று கூட சொல்லலாம்.இவை எல்லாம் வசந்தபாலனையே சேரும்.Miss.நதியா, நம் தமிழ் சினிமா ரசிகர்கள் நல்ல படைப்புகளை என்றுமே கைவிடுவதில்லை தானே.இதை பலமுறை நிரூபித்தும் இருக்கிறார்களே.வசந்தபாலன்,அஞ்சலி, மகேஷ் எல்லோருக்குமே பல விருதுகள் காத்துக்கொண்டிருக்கின்றன அவர்கள் ஏற்படுத்திய பிரம்மிப்பினால்.

ஸ்வீட் ராஸ்கல் said...

Miss.நதியா நிச்சயமா ஜெயமோகன் சார் புத்தகத்தை படிக்கிறேன்.நீங்கள் சொன்னதில் ஏழாம் உலகம் மட்டுமே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.படித்ததில்லை.நிச்சயமாய் படிக்கிறேன்.இந்த மாதம் அவருக்கு பிறந்தநாள் என்று சொன்னீர்களே,அவருக்கு எப்படி,எந்த தளத்தின் மூலம் என் வாழ்த்துக்களை தெரிவிப்பது என்று எனக்கு தெரியாது,நீங்கள் கொஞ்சம் சொன்னால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
நிச்சயமாக அடுத்தமுறை Alignment பிழைகள் வராமல் பார்த்துக்கொள்கிறேன்.நன்றி.மீண்டும் உங்களை சந்திக்கிறேன் இன்னும் ஒரு நல்ல படைப்புடன்.

சரண் said...

ரொம்ப அழகா எழுதியிருகீங்க.. நான் 2 நாளுக்கு முன்னாடிதான் படம் பாத்தேன்.. ஊருக்கு வந்ததும் கண்டிப்பா திரையரங்குப் போய் பாக்கோணும்...

உங்கல மாதிரியே நானும் அசந்து போய் கிடக்கறங்க.. நம்மள மாதிரி ரசிகர்களெல்லாம் எப்படி ஏங்கிப்போய் கிடக்கறங்கறது உங்கப் இடுகைப் படிச்சு நல்லாப் புரியுது.. உங்களுடய அங்கலாப்பும், அக்கறையும் எனக்கும் இருப்பதல உங்க வார்த்தைகளயும் மீறி உள்ள இன்னும் பல அர்த்தங்கள் புரியுது.. உங்கள மாதிரியே எல்லோர்க்கட்டயும் படத்தப் பத்தி சொல்லீட்டிருக்கேன்..
மக்கள் இந்தப் படத்த வெற்றியடைய வெச்சுட்டாங்கன்றது இன்னும் பல மடங்கு சந்தோசத்தத் தருது...

அன்புடன் மலிக்கா said...

விமர்ச்சனம் மிக அருமை. படமும் நல்லதொரு கதையைகொண்டது. வாழ்த்துக்கள்..

அருண்பாண்டியன் said...

தம்பி
உங்க விமர்சனம் இப்போதான் படிச்சேன்.மிகவும் நன்றிப்பா,இந்த படம் ஒரு ஃபெயிலியர் படம்னா நம்புவியாப்பா?சரி அதை விடு.உன் ஃப்ரெண்ட் யாரோ கதைகள் வச்சிருக்கான்னு சொன்னியே,அவனை என்ன வந்து பார்க்க சொல்லுப்பா,நாங்க சேர்ந்து படம் பண்ணறோம்,இது உன் விமர்சனத்துக்கு கிடைச்சவெற்றிப்பா.வாழ்த்துக்கள்.நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன்,நீதான் உதவனும்.நேரல் பார்ப்போம்.ஏவிஎம் வந்துடுங்க ஒரு மாசம் அங்கதான் இருப்பேன்,

ஸ்வீட் ராஸ்கல் said...

சரண் சார், அன்புடன் மல்லிகா இருவருக்கும் மிக்க நன்றி...காத்திருப்போம் இப்படி ஒரு காவியத்திற்காக மீண்டும்...

ஸ்வீட் ராஸ்கல் said...

அருண் பாண்டியன் சார்,
நீங்கள் என் ப்ளாகுக்கு வந்து கமெண்ட் போட்டு இருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.என்னால நம்ப முடியல. நான் இப்போது தான் உங்கள் கமெண்டை பார்த்தேன்.மிக்க நன்றி சார்.இது ஒரு மிகப்பெரிய வெற்றி படம் சார்.ஏன் இப்படி சொல்கிறீர்கள்.என் விமர்சனத்தையும் மதித்து என் நண்பனுக்கு வாய்ப்பு தருகிறேன் என்று சொன்னதற்கு முதலில் உங்களுக்கு ஒரு பெரிய தேங்க்ஸ் சார்.உங்களுடைய appoinment கிடைத்தால் நிச்சயம் நானும் என் நண்பனும் உங்களை வந்து பார்க்கிறோம்,கிடைக்குமா?...